கேள் என்னும் சொல்

எழுத்தாளர் முத்துலிங்கம் ஐயாவின் வேண்டுகோளுக்கிணங்க
கேள் என்னும் சொல்லைப் பற்றி நான் கூறியதன் கருத்துப்பிழிவைப்
பகிர்கின்றேன். 

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைக்கவிருக்கும் தமிழிருக்கைக்காக
நன்கொடை திரட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16, 2016) அன்று  தொராண்டோ அருகே இருக்கும் மார்க்கம் நகரில் அக்கினி இசைக்குழுவினர் ஒரு நிகழ்ச்சி நடத்தினர். 
நிகழ்ச்சி முடிந்தபின்னர் உணவகத்தில் பேசிக்கொண்டிருந்தபொழுது
இப்பதிவில் சுருக்கமாகக் கூறவிருக்கும் கருத்தைப் பற்றி
சுருக்கமாகக் கூறினேன். முத்துலிங்கம் அவர்கள்
மின்னஞ்சலில் இதுபற்றி கேட்டிருந்தார். இதனை முகநூலில் பகிருங்கள் எனக்கூறினார். முகநூலில் பகிர்ந்ததை  இங்கும் பகிர்கின்றேன்/
கேள் என்னும் சொல்லின் அருமையைக் கூறினேன்.
கேள் என்றால் காதால் கேட்டுணர்தல் (listen),
கேள்வி கேட்டல் (வினவுதல்) என்பதை அறிவோம்.
கேள் என்றால் ஒன்றை வேண்டிப்பெறுதல்,
உரிமையுணர்ந்து கொண்டாடிக் கொடுக்கச்சொல்லுதல்.
நோய்க்கு மருந்து முதலிய தந்தால்
நோய் தீரும் என்னும் பொருள்
(பேச்சுவழக்கில் அந்த மருந்து நல்லா கேக்கும் என்போம்).
கேட்டார் பிணிக்கு தகையவாய் என திருக்குறளும் ஆளும் சொல்.
இன்னும் பல பொருள்கள் இருந்தாலும் நான் அன்று
சொல்லவந்தது கேள் என்றால் அன்பு என்னும் பொருள்
பற்றியது. கேள் = அன்பு. இதிலிருந்து
கேள்வன் என்றால், காதலன், கணவன்.
கேள்வன் என்றால் நண்பன் என்றும் பொருள்.
கேண்மை எனில் நட்பு. நல்லுறவு. பெரியோர் கேண்மை
அன்று உணவகத்தில் சே'. கிருட்டிணமூர்த்தி (J. Krishnamurti)
என்னும் புகழ்மிகு மெய்யியலாளர் அடிக்கடி கூறும்
ஒரு பொன்மொழியைக் கூறினேன்,
அவர் மெதுவாக ஆழ உணர்ந்து கூர்மையாகக்
கூறுவார்:
To love is to listen
To listen is to love.
இந்த மந்திர மொழி தமிழில் ஒற்றைச் சொல்லில்
காவியமாய் அமைந்துள்ளது.
கேள்
ஒருசொல் ஒருமொழி ஒருகவிதை என்கின்றேன்.
வேதத்தை 'Revealed, heard inside' சுருதி (ஸ்ருதி) என்பார்கள்.
ஸ்ரு என்றால் கேட்டல்.
தமிழில் வேதத்துக்குக் கேள்வி
என்றே ஒருசொல் உண்டு.
கற்றிலரேனும் கேட்க என்னும்
பழமொழியும் உண்டு. கல்விகேள்விகளில்
சிறந்தவன் என்போம்.
இங்கெல்லாம் கேட்கத்தகுந்த நல்லனவற்றைக்
காதாலும்உ ள்ளத்துள்ளும் கேட்டலைக் குறிக்கும்.
சே'. கிருட்டிணமூர்த்தி
அவர்களும் சொல்லுவார், கேட்டல் என்பது
அப்படியே முழுக்க உள்வாங்கல்,
நம் 'மனம்' இடையே ஏதும் கிசுகிசுக்காமல்,
உளறிக்கொண்டிருக்காமல், ''ஆமாம் அது இங்கே
சொல்லியிருக்கின்றது அங்கே சொல்லியிருக்கின்றது
என்று இடையுரையாடாமல், ஆழ
அப்படியே இடையீடின்றி ஊன்றிக் கேட்பது'.
கேள்- கேள்வி என்பதைத் தமிழர்கள்
ஆழ ஆழ உற்றுணர்ந்துள்ளனர்.
கேள் எனில் அன்பு என்பதிலிருந்தேம் கேளிர்
எனில் அன்பான உறவுகள், நண்பர்கள் என்னும்
பொருள் பெற்றது.
யாதும் ஊரே யாவரும்
கேளிர்
என்னும் கணியன் பூங்குன்றனாரின்
முதுமொழியில்வரும்
கேளிர் என்னும் 
சொல் பொருளாழம் மிக்கது.
நீங்கள் அன்புடன் நினைவுகொண்டு
கேட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
இனிய தமிழின்பம் உலகம் பரவவேண்டும்.
(மின்மடலில் எழுதியது அக்டோபர் 18, 2016)

Comments

usharaja said…
மிக தெளிவான விரிவான கருத்துக்கள் கேளைப் பற்றி.
நன்றி
நண்பர் சிவசிவ என்னும் திரு வி. சுப்பிரமணி அவர்கள் சந்தவசந்தத்தில்
இட்டிருந்த கருத்து (30 அக்டோபர் 2016)
----------------------
Nice write up on கேள்.

பலரும் "பொன்னார் மேனியனே" என்று தொடங்கும் தேவாரப் பாட்டை அறிவர்.
அப்பதிகத்தில் அதற்கு அடுத்த பாட்டில் இச்சொல் இடம்பெறுகின்றது!

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70240&padhi=024&startLimit=2&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
சுந்தரர் தேவாரம் - 7.24.2
கீளார் கோவணமும் திரு நீறுமெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலை வாஎனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழ பாடியுள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.


நின்னையல்லால் கேளா இனி யாரை நினைக்கேனே

whom else shall I think now except you as my relation?
(Translation: V.M.Subramanya Ayyar)

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்
----------------------------------------------------
மிக்க நன்றி usharaja அவர்களே
This comment has been removed by the author.
கேண்மை, கேளிர் போன்ற சொற்ககளைப்புழங்கிவந்தாலும் கேள் என்றால் அன்பு என்ற பொருளை அறிந்திருக்கவில்லை. அறியத்தந்ததற்கு நன்றி, செல்வா.

பொருளியலில் நுகர்வோர் எவ்வளவு கொள்ளுவர் என்பதையும் கேள்வி என்கிறோம். வெள்ளையடிக்க சுண்ணாம்பில் நீரூற்றும்போது "இன்னும் கேக்குது, ஊத்து" என்பார்களென நினைவு. கொள் எனுஞ்சொல்லும் கேள் என்பதுடன் தொடர்புடையதா? மலையாளத்தில் കൊള്ളാം என்பதும் தொடர்புடையதா தெரியவில்லை.

பயனுடைத்து .
மிக்க நன்றி
கேள் - அன்பு, சுற்றம், உறவு, கேள் எனும் ஏவல்
இக்கருத்துகள் திருமகள் அகராதியில் உண்டு.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
https://kovaikkavi.wordpress.com/
வேதா. இலங்காதிலகம் அவர்களே, கருத்துக்கு மிக்க நன்றி. திருமகள் அகராதியில் இருக்கும் பொருள்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. கழகத் தமிழகராதி முதலான பல அகரமுதலிகளிலும் கேள் என்றால் அன்பு என்னும் பொருளைப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

சுந்தர், மிக நல்ல கேள்வி. கேள் என்பதை மேலும் ஆழமாக சொற்பொருளிய நோக்கில் அறிய முற்படுவது கற்பனையின்பால் போய்விடுமோ என அச்சம். கிள் - கிள என்பது பிரிவு, 'வெளிப்படுத்து' என விரியும். கேள் என்பது உள்வாங்கு, சூழ்ந்து உள்வாங்கு சூழ்ந்து உள்ளாக உணர் என்பது போன்றதான் பொருளாக உணர்கின்றேன். அன்புக்கு அடிப்படை உள்ளுள் ஒருமையதாய் ஒன்றாய் (இனிதாய்) உணர்தல் . கேட்டல் என்பதும் உள்ளுள்ளே உள்ளவாறே உற்றுணர்வது. உள்வாங்குவது கொள்வது என்றும் கொள்ளலாம். கேள்-கொள் குறுகிய பொருட்கோணத்தில் தொடர்பு கொண்டதாகக் கொள்ளலாம். //சுண்ணாம்பில் நீரூற்றும்போது "இன்னும் கேக்குது, ஊத்து" // இங்கே ஏதோ ஒரு நோக்கில் ஈடுகொள நிறைவுகொள்ள வேண்டபப்டுவது என்பதால் கேக்குது என்பது பொருந்தும். அடி கேக்குதா, இன்னும் உதை கேக்குதா என்பதில் 'அன்பு' இல்லை, அங்கே வேண்டப்படுவதைத்தான் குறிப்பிடுகின்றார்கள்.

Popular posts from this blog

INFITT's 16th World Tamil Internet Conference in Toronto, Canada, August 25-27, 2017

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு