Saturday, December 6, 2008

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு

தமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள் இன்று இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட முயற்சிகள் தமிழுக்கு அளப்பரிய கேடு செய்யும். இது பற்றி பேரா வா.செ.கு அவர்களிடமும், கணேசனிடமும் வேறு யாருடனும் நான் கருத்துரையாட அணியமாக இருக்கின்றேன். மொழி வேறு எழுத்துரு வேறு என்று பற்பல கருத்துகள் வைப்பவர்களின் கருத்தோட்டங்களை நான் நன்கு அறிவேன். இப்போதைக்கு அண்மையில் நண்பர் கணேசன் இட்ட கீழ்க்காணும் பதிவிற்கு என் மறுமொழியைக் கீழே ஓர் இடுகையாக பதிவு செய்கிறேன். பின்னர் தேவை கருதி இது பற்றி தொடர்ந்து சில கூறுதல் வேண்டும்.

http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html

நண்பர் கணேசன்,
வணக்கம். நான் எத்தனையோ முறை கூறியிருக்கிறேன். தமிழ் உயிர்மெய் எழுத்துக்களில் உள்ள இகர, ஈகார, உகர ஊகாரக் குறிகளைப் பிரித்து எழுதத்தேவை இல்லை. அருள்கூர்ந்து இதனைச் செய்யாதிர்கள்!! இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும். தட்டச்சுப் பொறி காலத்திய சீர்திருத்ததை, இன்று வளர்ந்துள்ள கணிப்புரட்சி நாளில், சிலிக்கான், நானோநுட்பக் காலத்தில், முன்வைத்து வலியுறுத்துவது என்னை வியக்க வைக்கின்றது. தமிழை alphabet முறைக்கு மாற்றுவது இந்திய எழுத்துமுறையின், அதுவும் சிறப்பாக தமிழ் எழுத்து முறையின் அருமையைக் கெடுப்பது ஆகும். தமிழ் எழுத்து முறை Abugida வும் அல்ல, Abjad முறையும் அல்ல. தனித்தன்மை வாய்ந்த தமிழ் எழுத்து முறை. . உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்டிருப்பது.

உயிர்மெய் எழுத்தின் உயிரைப் பிரித்து எழுத வேண்டும் எனில் ஏன் கி =க்இ என்றும், கு = க்உ என்றும் எழுதி, பகா எண்ணாகிய 31 எழுத்துக்களோடு எல்லாவற்றையும் அழகுற எழுதலாமே? அகரம் ஏறிய மெய்யெழுத்தை எழுதி எதற்காக ஐயா புதிதாக உயிர்க்குறி இடுதல் வேண்டும்?! தமிழ் எழுத்து முறையை மாற்ற வேண்டும் என்றால் இலத்தீன் எழுத்து முறைக்கு மாறிவிடலாமே? அல்லது "கூடை" என்பதை க்ஊட்ஐ என்று எழுதலாமே? ஏன் தனியாக மேலும் பிற உயிர்க்குறிகள் தேவை? தமிழ் உயிர்-மெய் எழுத்து மட்டும் கொண்டு இயங்கும் alphabet நெடுங்கணக்கு கொண்ட மொழியில்லை. தமிழ் உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றும் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. நீங்கள் கூறுவது redundant system (தேவையில்லாத, வெற்றாக மேலும் குறிகளை சேர்ப்பது; இருக்கும் குறைகளைப் பெருக்குவது. ). நான் மிகவும் மதிக்கும் வா.செ.கு அவர்களும் நீங்களும் ஏன்தான் இப்படி இந்த அழிவுதரும் போக்கை வலியுருத்துகிறீர்கள் என்று விளங்கவில்லை? அருள்கூர்ந்து இப் போக்கினை உடனே நிறுத்த வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன் செல்வா
'டிசம்பர் 6, 2008

13 comments:

Sundar said...

எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைப்பவர்கள் கவனத்துக்கு:

உங்கள் பரிந்துரைக்குப் பின்னாலுள்ள நல்லெண்ணத்தை மதிக்கிறேன். ஆனால் அவற்றை ஏன் ஏற்க முடியாது என்று கீழே சொல்லியுள்ளேன்.

சுருக்கமாக குறைந்த எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டுமாயின் அஃவ்மேன் குறிமுறையைக்கூட பயன்படுத்தலாம்! ஆனால், அவை கணிப்பொறியில் சேமிக்குமிடத்தில் எப்படியும் செய்யப்படுகின்றன.

ஒன்றை நாம் உணர வேண்டும் எழுதுவதை எளிதாக்குவது என்பது படிப்பதைக் கடிதாக்கும். Cognitive load என்பது ஏதாவது ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். எழுதுவது ஒருமுறையும் படிப்பது பல கோடி முறைகளும் இருக்கையில் படிப்பதைத்தானே எளிதாக்க வேண்டும்?

இன்னொன்றையும் பார்க்க வேண்டும் தமிழ் எழுத்து என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் இல்லை. அது alphabet என்றும் சொல்ல முடியாது abugidaவும் இல்லை. பார்க்க: http://web.archive.org/web/20050911032215/http://www.uni-koeln.de/phil-fak/indologie/kolam/kolam3/ceyyul1/ceyyul1.html#eluttu இன்று alphabet முறை என்றால் நாளை சீன மொழி செல்வாக்கு பெறும்போது அந்த முறைக்கு மாற முடியுமா? தமிழ் ஒலிப்புக்கும் வரிவடிவத்துக்கும் உள்ள பிணைப்பைக் குலைக்க வேண்டாம். ஒரு எழுத்தின் வடிவத்தை மாற்றுவது வேறு, எழுத்துக்களின் கணத்தையே மாற்றுவது வேறு.

செல்வா said...

சுந்தர் உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

இந்த சிறு இடுகை பல மின்மடல்களின் வழியே நண்பர் கணேசனோடு இன்னும் ஒரு சிலருடன் உரையாடியதின் சிறு பகுதி.

ஆ என்பதைக்கூட அ + கால் (அரவு) என்று இடலாம், ஈ = இ+கால், அப்புறம், கீ என்பதும் வேண்டாம், கி + கால் போதும், ஆமாம் கூ வும் வேண்டாம் கு +கால் போதும் என்றெல்லாம் சுருக்கிக்கொண்டே போகலாம் என்பார்களே இன்னும் சிலர் என்று முன்வைத்தேன். கை, கெ, கே கொ,கோ என்பதில் உள்ள "துணைக்குறிகளை" க என்னும் எழுத்துக்கு வலப்புறம் இட்டுக் காட்ட வேண்டும் என்கின்றனர் இன்னும் சிலர். இப்படியான சீர்திருத்தங்கள் ஏராளம். தமிழ் நெடுங்கணக்கு விளையாட்டுக்களம் அல்ல. கடைசியாகக் கூறினேன், ஏன் 0,1 ஆகிய இரண்டை வைத்துக்கோண்டே எல்லாவற்றையும் எழுத்லாமே?! இன்று எந்த சீர்திருத்தமும் வேண்டாம். கூ என்பதைக் கூட மூ என்பது போல எழுத்து சீர்திருத்தம் செய்ய வேண்டாம். ஒரு மொழியைப் பயில ஆயிரக்கணக்கான குறிப்புகளை நினைவில் கொள்ளுதல் வேண்டும். அப்படியிருக்க ஒரு சில எழுத்து வகைகளை நினைவில் கொள்ளுதல் கடினம் இல்லை.

உகர உயிர்மெய் எழுத்துகளில்

குடுமுருழு ஆகிய 5 ம் ஒரு வகை
ஙுசுபுயுவு ஆகிய 5 ம் வகை
ஞுணுதுநுலுளுறுனு ஆகிய 8ம் ஒருவகை

ஆக உகரக்குறில் 3 வகை

அடுத்து ஊகார உயிர்மெய்:

கூ ஒரு வகை
டூமூரூழூ ஆகிய 4ம் ஒரு வகை
ஙூசூபூஉயூவூ ஆகிய 5 ம் ஒரு வகை
ஞூணூதூநூலூளூறூனூ ஆகிய 8ம் ஒரு வகை.

ஆகவே இந்த 3+4 = 7 வகையை நினைவில் கொள்வது கடினம் என்றால் ஒரு மொழியை, அதுவும் இலக்கண வரம்புகள் கொண்ட தமிழ் மொழியை எங்ஙணம் கற்கப்போகிறார்கள்? ஆங்கிலத்திலே 26எழுத்துகள்தாம் என்பது வெறும் ஏமாற்றுப் பேச்சு. எழுத்துகளைக் கூட்டி படிக்க ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கில் குறிப்புகளை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இது சீன மொழியைக் காட்டிலும் கூடுதுலாக இருக்கும் என்பது என் தேறா முன்குறிப்பு. -tion, -shion, -sion, --ough, a in apple, a in appeal, a in ape , lk in milk-silk, lk in talk-walk, s in sugar, ch in chagrin, ch in character, ch in chair என்று அடுக்கிக்கொண்டே போகலாம். என்ன, ஆங்கிலம் படிப்பவர்கள் உலகில் குறைந்தா போயுள்ளார்கள்? கையில் சிராய்ப்பு என்று கூறி கண்ணைத் தோண்டி பிடுங்குகின்ற வேலையாக் இருக்கின்றது. சீர்ர்திருத்தம் பரிந்துரைப்போர் எண்ணிப்பார்க்க வேண்டும். இது பற்றி விரிவாக எழுத வேண்டும். நான் மிக மதிக்கும் என் பேராசிரியர் வா.செ.கு, நண்பர் கணேசன் அவர்கள் தீர எண்ணிப்பார்க்கவேண்டும். உகர-ஊகார சீர்திருத்தத்தால் விளையும் கேடு அளப்பரியது. மிகத்தவறான வாதம்.

RJAY said...

very nice work, I chanced upon your site from your wikipedia article on Heron. Please keep up the great work, Sir.

I fully support your passion to keep Tamil writing as is. (It is a really dumb idea to split the vowel, consonant pairs).

Indian languages have lived and grown long long time and have evolved not just great intellects and genius-es and also great emotional giants (realized souls). The language structure plays a huge role in easy teaching and learning and clear thinking. As you rightly point out, keeping letters to 26 requires learner to learn new letter-combinations and see each word as a new whole.

Combining each consonant and vowel into a phonetic symbol is a great language design idea that has probably evolved and survived. If anything, English should think of modifying its writing style to a phonetic format. gradually. little by little.

I liked your writing and Mr.Sundar's excellent followup mail to.

Thanks
Ravi

செல்வா said...

RJAY,

உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி. தங்களைப் போல் பலரும் புரிந்துகொண்டு இவ்வகையான மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் வருகை புரிந்தது கண்டும் மிக்க மகிழ்ச்சி. இயலும் வகையில் தமிழ் விக்கிப்பீடியாவிலும் ஆக்கங்கள் தர வேண்டுகிறேன். நன்றி.

ஈழக்கதிரவன் said...

வணக்கம்.
செல்வா அவர்களே!

உங்கள் தமிழ்வெளி அழகு.

பாராட்டுக்கள்.

நேசமுடன்...
சு.பா.ஈஸ்வரதாசன்.

(குறிப்பு உங்கள் தனிமடல் தொடர்பை எதிர்பார்க்கிறேன்.)

வினோத் ராஜன் said...

முற்றிலும் உண்மை.

எழுத்துமுறை ஒரு பண்பாட்டுச்சின்னம். Its a Cultural Relic. அதை மாற்றுவது சரியில்லை.

//இதனால் பல மில்லியன் கணக்கான பதிவுகளை மக்கள் படிக்க இயலாமல், கல்வெட்டு தேர்வாளரைக் கொண்டு படிப்பது போல படிக்க நேரும்//

இன்னொரு மன்றத்தில், பழஞ்சீனத்தின் எழுதப்பட்ட நூல்கள் அனைத்தும் கல்வெட்டியிலாளர்கள் மட்டும் படிக்கும் "பொருட்களாக" ஆகிவிட்டன என்று வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

இது தமிழுக்கும் பொருந்தும்.

பி.கு: இன்னும் நான் எழுத்துச்சீர்திருத்தத்துக்கு முந்தைய வடிவங்களை காட்டும் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை வைத்துக்கொண்டு தான் தமிழை பல காலமாக வாசித்து வருகிறேன் :)

செல்வா said...

வின்னோத்,

உங்கள் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி :)

வினோத் ராஜன் said...

:)

இதிலாவது நாம் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரியான கருத்த்தைக்கொண்டுள்ளோம் ;)

ரவிசங்கர் said...

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக தமிழகத்துக்கு வெளியே 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றும் இச்சீர்திருத்தம் அவர்கள் தமிழ் கற்க உதவும் என்றும் சொல்கிறார். இந்த அடிப்படையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தொகையைக் காட்டிலும் பெரிய மக்கள் தொகையை அயலகத்தில் கொண்டுள்ள மொழிகள் எத்தனையோ உள்ளன. (எடுத்துக்காட்டுக்கு, சீனம்.) இந்த மொழிகள் எவையும் இதற்காக தங்கள் எழுத்து முறையை மாற்றுவதில்லை.

அயலக மக்கள் மொழியைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. தாயக மக்களுக்கு உள்ள கல்வி, சமூகச் சூழல் வாய்க்காததே முக்கிய காரணம். இப்படி ஒரு எழுத்துச் சீர்திருத்தம் செய்தால், அவர்கள் மொழித்திறன் கூடும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆய்வும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்க, இந்த மாற்றம் அவர்களுக்காக தாயகத் தமிழர்களையும் சேர்த்துக் குழப்புவதாகவே அமையும்.

ரவிசங்கர் said...

பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம் என்று இதனைக் குறிப்பிடுவதும் ஏற்புடையதாக இல்லை.

அச்சு வில்லைகள் தொடர்பான (நிறுவக் கூடிய) நடைமுறைப் பிரச்சினையின் காரணமாக பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் வந்ததாக கேள்வி.

அதுவும் அவர் புதிதாக குறியீடுகள் ஏதும் புகுத்தவில்லை. ஆகார, ஐகார வரிசைகளில் ஏற்கனவே மற்ற உயிர்மெய்யெழுத்துகள் பயன்படுத்திய குறியீடுகளையே றா, னா, ணா, லை, ளை, னை, ணை ஆகியவற்றுக்குப் பொருத்தினார். எழுதும் முறை புதிதானாலும் மக்கள் ஏற்கனவே அக்குறியீடுகளுக்குப் பழகி இருந்தது ஒரு முக்கிய விசயம். தற்போதைய பரிந்துரையில் முழுக்க புதுக் குறியீடுகள் வருவது குழப்பும்.

ரவிசங்கர் said...

நூற்றாண்டுகள் தோறும் நேர்ந்த தமிழ் எழுத்து மாற்றம் குறித்த படம் காணலாம். இதில் எனக்கு சில ஐயங்கள்:

* இந்த மாற்றம் ஒரு சில ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதா? அல்லது, சீராக அக்காலத்தைய எல்லா கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் காணப்பட்டதா?

* தகவல் தொடர்பு பெரிதாக இல்லாத அக்காலத்தில் சீரான எழுத்து மாற்றங்கள் இருந்தது எப்படி?

* இந்த எழுத்து மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்திருக்க கூடும்? இப்போது போல் யாரும் முடிவெடுத்து மாற்றி இருப்பார்களா? அதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரம் யாரிடம் இருந்தது?

* இல்லை, எழுதப்பட்ட பொருள், அதற்குப் பயன்படுத்திய கருவிகளின் தன்மை காரணமாக, அதாவது நடைமுறை நுட்பக் காரணங்களால் இம்மாற்றங்கள் தானாக நிகழ்ந்தவையா (யாரும் முடிவெடுத்துச் செயற்படுத்தாமல்)?

தமிழ் மொழி குறித்த இவ்வாதாரங்கள் இல்லாவிட்டாலும் இதே போல் மாற்றங்கள் நிகழ்ந்த பிற மொழிகளின் தன்மைகளையாவது அறிய வேண்டும். இதன் மூலம், நாம் தற்காலத் தமிழில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்கள் குறித்து ஒரு அறிவடிப்படை நிலைப்பாட்டை எடுக்க இயலும்.

நன்றி.

செல்வா said...

ரவி உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி. மொழியில்
புதிய ஆக்கங்களைப் பெருக்க வேண்டுமே அல்லாமல், இப்படி மொழியைக் கெடுத்து உள்ள நூல்களையும் படிக்க முடியாமல்
செய்வதால் என்ன பயன்? பல்லாயிரக்கணக்கான நூல்களையும்,
துண்டு வெளியீடுகளையும் புதிய முறையில் அச்சிட்டு நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் பெரும்பாழ் செய்வதா சீர்திருத்தம்?
அந்த உழைப்பிலும், பணத்திலும் எத்தனை புதிய ஆக்கங்கள் செய்யலாம்!ஒருசில உகர ஊகார வடிவங்களை நினைவில் கொண்டு கற்க இயலாதவர்கள், எப்படி ஒரு மொழியைக் கற்கப்போகிறார்கள்? ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான எழுத்துக்கூட்டல்களையும் ஒலிப்புகளையும் நினைவில் கொள்ளவேண்டுமே, ஏன் அவர்கள் முன்னேறவில்லையா?

suryan said...
This post has been removed by a blog administrator.