தமிழ்வெளி என் முதல் முயற்சி.

நம் தமிழிலே
பயன் பெருக்கும் அறிவியலைப் பற்றி
பலரும் அழகாக எழுதுவதைக் கண்டு மிகவும் மகிழ்பவர்களில் நானும் ஒருவன்.
முன்னோடி வலைஞர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

என் எண்ணங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள ஒரு
'ப்லா'க் வேண்டும் என்று எண்ணினேன். பல நண்பர்கள் பலகாலமாக பரிந்துரைகள் செய்து வந்தனர்.

இதோ துணிந்தும் விட்டேன்.

முதலிலே தமிழ் முறைக்கு முரண்பட்ட
பிறமொழி ஒலிகளைக் குறிக்க ஒரு நல்ல முறை வேண்டும்.
ஏனெனில் இவ்வகை ஒலிகள் பல இடங்களில் ஆள வேண்டிய
கட்டாயம் ஏற்படுகின்றது.

Blog என்னும் சொல்லையே எடுத்துக்கொள்ளுங்கள்.
இதில் வரும் b, g ஆகிய இரண்டு ஒலிகளும் தமிழ் முறைப்படி
எழுத இயலாது. ப்லாக் என்று எழுதினால் plaak என்றுதான் ஒலிக்க வேண்டும்.
இது ஏதோ பல்லுக்கு வரும் கோளாரோ என்று எண்ண நேரிடும்

b என்பதைக்குறிக்க ப் என்னும் மெய் எழுத்துக்கு முன்னதாக ஒரு சிறு குறி இடலாம். இதனை முன்கொட்டு என்று நான் கூறுகிறேன்.
எடுத்துக்காட்டாக 'ப் = b

ga என்னும் ஒலியைக் குறிக்க ககரத்தின் முன்னே ஒரு முன்கொட்டு இடலாம்.
Gandhi = 'காந்தி

எனவே blog என்பதை தமிழில் 'ப்லா'க் ன்று எழுதினால் ஒலித்திரிபு சற்று குறைவாக இருக்கும்.

மேலும் சில எடுத்துக்காட்டுகள்:

தமிழ் ஆசிரியர்கள் சகன்னாதன் என்று எழுதுவதை நாம் 'சகன்னாதன் என்று எழுதலாம்.

டேவிட் என்று எழுதினால் தமிழில் tavit என்றுதான் ஒலிக்க வேண்டும். முதலில் வரும் வல்லினம் எப்பொழுதும் வலித்தே ஒலிக்கும் (முதலில் டகரம் வரக்கூடாது என்பது வேறு செய்தி). இதனை 'டேவி 'ட் என்று எழுதினால் David என்றே ஒலிக்க இயலும். அதே போல 'டம் 'டம் வானூர்தி நிலையம்.

தாதாபாய் நௌரோசி என்று ஒருவர் இருந்தார் தெரியுமா? இவர் பெயரை 'தாதாபாய் நௌரோ'சி என்று எழுதலாம். 'தாதாபாய் என்பதில் உள்ள இரண்டாவது தா வுக்கும் பா வுக்கும் முன்கொட்டு ஏன் இடவில்லை? தமிழ் இலக்கண விதி மிக எளிமையானது. ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வந்தாலோ அல்லது முன்னே புள்ளி வைத்த வல்லின எழுத்து வந்தாலோ மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும். எனவே இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே வல்லின எழுத்து வலித்து ஒலிக்க வேண்டும். மற்ற இடங்களில் எல்லாம் மெலிந்தே ஒலிக்கும்.

ஆகவே பாபு என்று தமிழில் எழுதினால் paabu என்றுதான் தமிழில் ஒலிக்க வேண்டும். எழுத்தொலியை திருத்தமாக சொல்லில் ஒலிப்பதற்குத் தமிழில் பலுக்கல் என்று பெயர். எனவே பலுக்கல் என்றால் என்ன கலக்கல் என்று மலைக்காதீர்கள். எப்படிப் பலுக்க வேண்டும் என்று உணர்தல் வேண்டும்.

அடுத்ததாக இந்த F என்னும் ஒலி மிகத் தேவைப்படுகின்றது. இதனை தமிழில் ஃப என்று எழுதுகிறோம். F இன் ஒலி கீழ் உதடு மேல் பல்லுடன் உரசி எழுவது. இதற்கு மிக நெருக்கமான தமிழ் ஒலி வ. எனவே 'வ என்று எழுதலாம். Faraday என்பதை பாரடே என்று எழுதலாம். இப்பொழுது ஃபாரடே என்று எழுதுகிறோம், ஆனால் என் பரிந்துரை 'வாரடே என்று எழுதலாம் என்பதே.

சரி முடித்துவிட்டதா? ஐயோ இல்லையே!!

வைணவப் பெரியார் இராமானு'சர் ஆண்டாளில் சொல்லான 'சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்தேன்' என்று ஒரு சிறுமி பாடக் கேட்டவுடனே முழுவுடலும் தரை தழுவ விழுந்து சேவித்தாராம். ஆண்டாளே வந்து பாடியது போல் உணர்ந்தாராம். அந்த சிற்றம் சிறு காலை என்பது தமிழில் வைகறை என்று கூறுவர். சமசுகிருதத்தில் உ^சா என்பர். சில பெண்மணிகளின் பெயராகவும் இது விளங்குகின்றது.

எனவே ^சண்முகம், வில்லியம் ^சாக்லி , ^சோபனா முதலியனவற்றைப் புரிந்து கொள்ளலாம்.

சரசுவதி என்று எழுதுவது நல்லது. ஆனால் சிலர் சர~ச்வதி என்று எழுத வேண்டும் என்கிறார்கள்.

அனுமான் என்றாலே போதும். ஆனால் சிலர் ஃஅனுமான் என்று எழுத வேண்டும் என்பர்.

ஆகவே புது எழுத்துகள் ஏதும் இல்லாமல், ஒலித் திரிபுக் குறிகளை மட்டுமே கொண்டு, தமிழ் முறைக்கு முரண்பட்டு வரும் சில இடங்களிலும், தமிழில் வழங்காத ஒலிகளையும் குறிக்க முடியும்.

சுருங்கச் சொன்னால்:
ga = 'க, ja = 'ச, da = 'ட , dha = 'த , ba = 'ப , fa = 'வ ,
ha= ஃஅ, sha = ^ச, sa = ~ச, za= *ச

எழுதிப்பாருங்கள் எத்தனை எளிதாக இருக்கின்றது என்று!
ஒரே ஒரு குறிதான் வேண்டும் ga, ja, da, dha, ba, fa ஆகிய ஆறுக்கும்.
இந்த சகர வேறுபாடுகளுக்குத்தான் ^ ~ *ஆகிய மூன்று குறிகள். ஷ ஸ, z ஆகிய மூன்று எழுத்துகளும் அவைகளின் இகர உகர முதலிய வேறுபாடுகள் ஏதும் தேவை இல்லாமல் எளிதாக இந்த ஒலித் திரிபுக் குறிகளை மட்டுமே கொண்டு எழுதலாம். தமிழ் போற்றுவோர் அனைவரும் எடுத்தாளுங்கள்!

நன்றி

செல்வா
வாட்டர்லூ, கனடா
9 மார்ச் 20007

Comments

தொடர்ந்து எழுதுங்கள் செல்வா, அறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.
சிவகுமார், ஊக்கத்திற்கு நன்றி. கட்டாயம் எழுதுகிறேன்.
ENNAR said…
செல்வா நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்
செல்வா, தாங்கள் இக்குறியீடுகளைத் தேர்ந்தெடுத்தற்கு பின்னணி ஏதும் உள்ளதா?
ennar, நன்றி. வருகைக்கு நன்றி. எழுதுகிறேன்.
சிவகுமார்,

பின்னணி என்ன? தேவைதான் அடிப்படை. தமிழ்மொழியின் ஒலிப்பாங்கு குறையாமலும், புதிய எழுத்துக்கள் உருவாக்கத் தேவை இல்லாமலும் இருக்க வேண்டும் என்ற உந்துதல் தான்.
நான் இங்கே இட்டுள்ள இம்முறையை 10 ஆண்டுகளுக்கு முன் வலையில் இட்டிருந்தேன் (தமிழ்.நெட், அகத்தியர் முதலியவற்றில்). அதற்கு முன்னரும் 25 ஆண்டுகளுக்கு முன்னரும் f முதலிய எழுத்துக்களுக்கு தனி வரிவடிவம் கொண்டு எழுதிவந்தேன். புதிய எழுத்து இல்லாமல், ஒலித்திரிபைக் காட்ட ஒரு எளிய முறை இருந்தால் தமிழில் g,j,d,dh,b,f,h,sh,S, z ஆகிய எழுத்தொலிகளையும் குறிக்க முடியும். எனவே இந்த முறையைத் தேர்ந்தெடுத்தேன். ஒரே ஒரு முன்கொட்டுதான் g,j,d,dh,b,f ஆகிய ஆறு எழுத்துக்களுக்கும் அவைகளின் உயிர்மெய்களுக்கும் (மொத்தம் 6x12 = 72) தேவை. எழுதுவதும் எளிது. கணினியில் தட்டியெழுதுவதற்கும் எளிது. sh, S, z ஆகியவற்றுக்குத்தான் மேலும் குறிகள் தேவைப்படுகின்றன. h என்பதை எளிதாக ஆய்த எழுத்தைக்கொண்டு எழுதலாம்.
Sundar said…
செல்வா, எனக்கு முன்பு இம்முறையின் அன்றாட பயன்பாட்டைப் பற்றிய மாற்றுக்கருத்து இருந்து வந்தாலும் இப்போது ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது போன்ற சிக்கல்களை பிற மொழிக்காரர்களும் எதிர்கொண்டிருப்பர்தானே? ஏதாவது முற்காட்டுதல்கள் உண்டா?
This comment has been removed by the author.
சுந்தர்,
முதலில் உங்கள் வருகைக்கு நன்றி. காலம் தாழ்து மறுமொழி தருவது குறித்தும் வருந்துகிறேன்.

உங்களுக்கு இந்த முறை பற்றி "ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளது." என்று அறிய மகிழ்ச்சி.

//இது போன்ற சிக்கல்களை பிற மொழிக்காரர்களும் எதிர்கொண்டிருப்பர்தானே? ஏதாவது முற்காட்டுதல்கள் உண்டா?//
தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் எல்லாம் g,j,d,dh,b,sh,s,h முதலானவற்றுக்கு எழுத்துக்கள் கொண்டுள்ளன. F என்பதற்கு பகரத்தின் கீழே புள்ளி வைத்து இந்தி போன்ற மொழிகளில் வழங்குவது உங்களுக்குத் தெரியும். தமிழில் நான் கூறும் இம்முறை மிக எளிதானது.
தமிழ் மரபுக்கு மாறுபட்டு இடங்களில் மட்டும் பொறுப்புடன் பயன்படுத்தி வந்தால், தமிழில் ஓரள்விற்கு அதிகம் திரிபில்லாமல் பிறமொழி ஒலிப்புகளைக் (குறிப்பாக ஆங்கிலம், பிற இந்திய மொழிகள்) குறிக்க முடியும். எடுத்து ஆண்டால் விலங்கும். இராமானு'சம். 'காந்தி,
'விளெமிங், ஃஆர்ட்...இப்படி மிக எளிதாக காட்டலாம். ப்யன்படுத்துங்கள் சுந்தர்! அன்புடன் செல்வா
சுந்தர்,

முதலில் உங்கள் வருகைக்கு நன்றி. காலம் தாழ்ந்து மறுமொழி தருவது குறித்தும் வருந்துகிறேன்.

உங்களுக்கு இந்த முறை பற்றி "ஓரளவு உடன்பாடு ஏற்பட்டுள்ளது." என்று அறிய மிகவும் மகிழ்ச்சி.

//இது போன்ற சிக்கல்களை பிற மொழிக்காரர்களும் எதிர்கொண்டிருப்பர்தானே? ஏதாவது முற்காட்டுதல்கள் உண்டா?//
தமிழ் தவிர்த்த இந்திய மொழிகள் எல்லாம் g,j,d,dh,b,sh,s,h முதலானவற்றுக்கு எழுத்துக்கள் கொண்டுள்ளன. F என்பதற்கு பகரத்தின் கீழே புள்ளி வைத்து இந்தி போன்ற மொழிகளில் வழங்குவது உங்களுக்குத் தெரியும். தமிழில் நான் கூறும் இம்முறை மிக எளிதானது.
தமிழ் மரபுக்கு மாறுபட்டு வரும் இடங்களில் மட்டும் பொறுப்புடன் பயன்படுத்தி வந்தால், தமிழில் ஓரளவிற்கு அதிகம் திரிபில்லாமல் பிறமொழி ஒலிப்புகளைக் (குறிப்பாக ஆங்கிலம், பிற இந்திய மொழிகள்) குறிக்க முடியும். எடுத்து ஆண்டால் விளங்கும். எ.கா. இராமானு'சம். 'காந்தி, 'விளெமிங், ஃஆர்ட்...இப்படி மிக எளிதாக காட்டலாம். ப்யன்படுத்துங்கள் சுந்தர்!

அன்புடன் செல்வா
sundarnb said…
அன்பு செல்வா
புதிய வலைப்பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ப்ளாக் என்பதை வலைப்பதிவு, வலைப்பூ என அழகாக தமிழில் கூறலாமே ஏன் ப்லாக், ப்ளாக்....?!?

முரண்பட்ட (முறண்பட்ட என்பது தவறு)
வருகைக்கு நன்றி Sundarnb,

எழுத்துப் பிழை சுட்டிக் காட்டினமைக்கு நன்றி. வலைப்பதிவு, வலைப்பூ முதலிய சொற்கள் இருப்பதை நன்கு அறிவேன். 'ப்லா'க் என்னும் சொலின் வழி என் கருத்தை வெளிப்படுத்த முயன்றேன்.
பிறமொழி சொற்களில் வரும் பிறமொழி ஒலியன்கள் பற்றியத்தானே இப்பதிவு.
நன்றி.
Anonymous said…
பேராசிரியருக்கு வணக்கம். விக்கிபிடியாவில் இருந்து தங்கள் வலைப்பக்கம் வருகிறேன். தமிழ்நாட்டில் இருந்து வந்த தாங்கள் தமிழுக்கு ஆற்றிவரும் சேவை அறிகிறேன்.
தமிழ் ஒலி குறித்த இக்கட்டுரை அருமை. மேலும் விவாதங்கள் தேவை. தேவைப்படின் பிறிதொரு சமயம் தனிமடலில் தொடர்பு கொள்கிறேன்.
ஜான் போஸ்கோ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் ஊரில் இல்லாததால் உடனே மறுமொழி தர இயலவில்லை. மன்னிக்கவும். புதிய சிந்தனைகள் எழ வேண்டும், அவை நலம் பெருக்குவதாய் அமைய வேண்டும். தமிழ் மொழியின் அருமைகளுக்குக் கேடு வராமல் வளர்த்தல் வேண்டும்.
Balaji said…
This comment has been removed by the author.
Balaji said…
ஐயா,

நீங்கள் இது குறித்து ஆய்திருப்பீர்கள் என்று நினைப்பதால் கேட்கிறேன். முடிந்தால் உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.

ga = 'க, ja = 'ச, da = 'ட , dha = 'த , ba = 'ப

மேலுள்ள தங்கள் பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொண்டாலும் இவை நிச்சயமாகத் தேவைதானா? காந்தி என்பதில் வரும் ga ஒலிப்புக்கு குற்றியலுகரம் போன்று மருவிய ஒலிப்பு என்று எதேனும் புதிய இலக்கணம் வகுக்கமுடியாதா?

fa = 'வ, ha= ஃஅ, sha = ^ச, sa = ~ச, za= *ச

மேலுள்ள எழுதுக்களை diatrics கொண்டு எழுதுவதற்கு பதிலாக புதிய மெய்களை உருவாக்கக்கூடாதா? வல்லினம், மெல்லினம், இடையினம் போன்று 'புதுயினம்' என்று கொள்ளலாமா? பொதுவாக மொழிகளில் உயிர்களையோ, மெய்களையோ சேர்க்கும் வழக்கம் இருக்கிறதா?

ஹ், ஷ், ஸ், x, y, ? என்று மெய்யினத்தை உருவாக்கினால் 12 * 24 என்று கச்சிதமாகப் பொருந்துமே?

பாலாஜி.
பாலாஜி,

தங்கள் வருகைக்கும், கருத்து பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி. மிகவும் காலம் தாழ்ந்து மறுமொழி இட நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.

நீங்கள்:
//மேலுள்ள தங்கள் பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொண்டாலும் இவை நிச்சயமாகத் தேவைதானா? காந்தி என்பதில் வரும் ga ஒலிப்புக்கு குற்றியலுகரம் போன்று மருவிய ஒலிப்பு என்று எதேனும் புதிய இலக்கணம் வகுக்கமுடியாதா?//

முன்கொட்டு இடுவதே ஒலித்திரிபைக் காட்டத்தானே. தனித்த குறியீடு இல்லாமலும், தனியெழுத்து இல்லாமலும் தமிழ் மரபுக்கு மாறுபட்டு வரும் இடங்களில் மட்டும் எப்படி வல்லின ககரம் "சில இடங்களில்" மட்டும் மெலிந்து ஒலிக்க இலக்கணம் வகுக்க இயலும்? தெரிந்தால் சொல்லுங்கள், மிகவும் பயனுடையதாக இருக்கும்! இயலாது என்பது என் கணிப்பு.

குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் தமிழில் மிக நுட்பமாக ஆய்ந்து வடித்த சார்பெழுத்துக்கள். அவை "எழுதோரன்ன" = எழுத்தைப்போன்ற தனி ஒலிப்பு இலக்கணம் கொண்டவை.

அவை தமிழ்மொழிச்சொற்களுக்கே பொருந்தும். (தமிழ் மொழிச் சொற்களில் வழங்கும் சீர்மையினால்).

//மேலுள்ள எழுதுக்களை diatrics கொண்டு எழுதுவதற்கு பதிலாக புதிய மெய்களை உருவாக்கக்கூடாதா?//

diatrics பயன்படுத்துவதே புதிய எழுத்து உருவாக்காமல் அதன் பயனைப் பெறுவதுதானே. ஆங்கிலத்தில் தகரத்திற்கு ஓரெழுத்து இருந்தும் அதனை ஒழித்துவிட்டு th என்னும் ஈரெழுத்து (digraph) முறையைக் கைக்கொண்டுள்ளனர். எழுத்துக்களை கூட்டிக்கொண்டே போனால் விடிவே இராது. ஸ்பானிஷில் (எசுப்பானிய மொழியில்) Jesus, Japan, James, John என்று எத்தனையோ சொற்களில் வரும் 'சகர ஒலியை (J ஜகரம்) குறிக்க இயலாது. அவர்கள் என்ன புதிய எழுத்தையா தேடிக்கொண்டு செல்கிறார்கள்? எண்ணிப்பாருங்கள்! இதே நிலைதான் 'டாய்ட்ச் ('செர்மன்) மொழிக்காரர்களுக்கும். அவர்களிடமும் இந்த 'சகரம் (ஜகரம்)கிடையாது. உலக மொழிகள் பலவற்றையும் பாருங்கள். ஒரு மொழியின் நெடுங்கணக்கையே மாற்ற வேண்டும் என்று கூறுவது, ஏற்கவியலாதது. நாளை சீன மொழி செல்வாக்கு பெற்று இருக்கும், அல்லது ஏதோ கரணியத்திற்காக போலி^சிய மொழி (polish) உறவாட்டம் கூடியிருக்கும், இப்படிப் பல மொழி உறவாட்டங்களினால் ஒவ்வொரு முறையும் எழுத்துக்களைக் கூட்டிக்கொண்டே போக வேண்டியிருக்கும். இன்றுள்ள உலக மொழிகளிலேயே மிகப்பழம் மொழிகளில் ஒன்றாகிய தமிழை ஏன் நாம் மதித்து நடக்கக் கூடாது?

//பொதுவாக மொழிகளில் உயிர்களையோ, மெய்களையோ சேர்க்கும் வழக்கம் இருக்கிறதா?//

இல்லை. ஆங்கிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள், உலக மொழிகள் நூற்றுக்கணக்கான மொழிகளைப்பற்றியும் அவற்றின் இலக்கணம், இலக்கியம் பற்றியும் பன்னூறு விதமாக அலசி எழுதுகிறார்கள், ஆனால் அவர்கள் என்ன புது எழுத்துக்களையா தங்கள் நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள்? எத்தனை மொழி அகராதிகள் படைத்துள்ளார்கள்?, பன்மொழி ஆய்விதழ்கள் நடத்துகிறார்கள்? ஏன், சமசுகிருத இலக்கியங்களையே கூட பலரும் உரோமானிய (இலத்தீன்) எழுத்து முறையில் எழுதிய ஆங்கிலமொழி வழியேதான் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் என்ன ஞ, ண, த, ங முதலான பற்பல எழுத்துக்களையா சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்? இல்லையே? தமிழ்ச் சொல்லாகிய பறையன் என்பதை paraiya என்றுதானே எழுதுகிறார்கள். அவர்களை paறைyaa என்றா எழுத வலியுறுத்த முடியும்? ஏற்றுக்கொள்வார்களா? ஒவ்வொரு மொழியும் அவர்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைத்தான் பயன்படுத்துவர். இதில் தவறேதும் இல்லை. சிற்சில தேவைகளுக்காக ஒலித்திரிபுக் குறிகள் இட்டு காட்டுவது போதுமானது.

மீண்டும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Sundar said…
தங்கள் மறுமொழி கண்டேன். சிறிதளவிலாவது பயன்படுத்திப் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்.
சுந்தர்,

உங்கள் மீள்வருகைக்கு நன்றி.

ஒன்றை கருத்தில் கொண்டு பயன் படுத்திப் பாருங்கள். தமிழில் எழுதும்பொழுது தமிழ்ப்படுத்தித்தான் எழுதுதலும் சொல்லுதலும் வேண்டும். இல்லாவிடில் தமிழின் ஒலிப்புச் சீர்மை கெட்டுவிடும். எனவே குறைவாகவே இக்குறிகளை எடுத்தாளவேண்டும். ஒரு சொல்லில் ஒன்றிரண்டு இடங்களுக்கு மேல் வருதலும், ஒரு சொற்றொடரில் பல இடங்களில் வருதலும் தவிர்க்க வேண்டும்.

அதிக துல்லியம் பார்த்தால், தமிழின் இனிமை, ஒலிப்பாங்கு எல்லாமும் கெடும். கிரந்த எழுத்துக்கள் இட்டு எழுதினாலும், அதிக கிரந்த எழுத்துக்கள் இருந்தால் இதே கெடுதி நிகழும். எல்லா மொழியாளரும் தம்தம்மொழி இயல்புப்படி திரித்தே ஒலிப்பார்கள், வழங்குவார்கள். Buddha 'புத்தா என்னும் சொல்லை ஆங்கிலேயர் 'பூடா என்றுதான் ஒலிக்கிறார்கள். 'காந்தி என்னும் பெயரை 'கேண்டி (Gayndee) என்றுதான் ஒலிக்கிறார்கள். ஏதோ Gandhi, Ghandhi என்று எழுதிவிட்டால் துல்லிய ஒலிப்பு வந்துவிட்டதாகவே, அப்படித் துல்லியத்துடன் ஒலிப்பதாகவோ நினைத்தல் உண்மை நடப்பை அறியாமை. எனவே இவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். ஆய்த எழுத்து முதலில் வருதலைத் தவிர்ப்பதற்கு Hitler என்பதை ˚இட்லர் என்று எழுதலாம்.

செல்வா
Sundar said…
//குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் தமிழில் மிக நுட்பமாக ஆய்ந்து வடித்த சார்பெழுத்துக்கள். அவை "எழுதோரன்ன" = எழுத்தைப்போன்ற தனி ஒலிப்பு இலக்கணம் கொண்டவை. //
குற்றியலுகரத்தைக்கூட புள்ளி கொண்டு வேறுபடுத்திக் காட்டும் வழக்கும் இருந்ததாக தொல்காப்பியம் சொல்கிறது!
சுந்தர் மீண்டும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆம் சார்பெழுத்தையும்கூட சில இடங்களில் குறிக்க வழி வைத்திருந்தனர்.
வணக்கம் செல்வா
தமிழ் விக்கிபீடியாவில் இனி கவனம் செலுத்துவேன்.
ஊருக்குப் புறப்படுகிறேன்.மாலை திரும்பியதும் விரிவாக எழுதுவேன்.
தங்கள் மின்னஞ்சல் முகவரி தேடத் தயங்கி குறுக்கு வழியில் உங்களிடம் வந்துள்ளேன்.
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
+91 9442029053
வணக்கம்.

திருப்பூரில் இருந்து ஜோதிகணேசன்,

தேவியர் இல்லம் திருப்பூர் என்ற இடுகை மூலமாக ஈழ வரலாற்றை எழுதிக்கொண்டு வருகின்றேன்,

உங்களிடம் விக்கிப்பீடியா குறித்து பேசவேண்டும்.

வாய்ப்பு இருந்தால் இந்த மின்அஞ்சல் மூலம் உங்கள் மின் அஞ்சலை தெரியப்படுத்துங்கள்.

புரிதலுடன் கூடிய உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும்

ஜோதிஜி

texlords@gmail.com
பேராசிரியர் செல்வா அவர்களுக்கு,வணக்கம்.தங்கள் தமிழ்ப்பற்றுக்கும் சலியா உழைப்பிற்கும் தலைவணங்குகிறேன்.தமிழில் இல்லா ஒலிகளுக்குத் தமிழில் வரிவடிவமோ குறியீடோ தேவையில்லை.ரோசாப்பூ என்றுதான் மண்ணின் மைந்தன் கூறுகிறான்.ரோஜாப்பூ என்பவர்கள் அயல்மொழி அடிமைகள்.இந்தியில் தன்ன்னொலி மட்டுமே போற்றப்படுகிறது.தொல்காப்பியம் அங்கே தோல்காப்பியம் என்றுதான் எழுதப்படுகிறது.தன் மொழியில் 'ஒ'கரம் இல்லையே என்று யாரும் வரிவடிவத்தை இந்நாள்வரை உருவாக்கவில்லை.இந்தியில் 'அக்டோபர்' அக்குதூபர் என்றும் பெப்ருவரி பரவரி என்றும் 'மே'மாதம் 'மயீ' என்றும் எழுதப்படுகின்றன.நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒருநாட்டின் "ஒரே"ஆட்சிமொழியாக விளங்கும் இந்திக்காரருக்கு இல்லாத கவலை தமிழருக்கு மட்டும் ஏன்?எந்த மொழியும் தன்னிடம் இல்லாத எழுத்துக்காக வரிவடிவத்தைப் படைத்ததாக வரலாறு இல்லை.தங்கள் உழைப்புக்கும் தமிழ்த்தொண்டுக்கும் தமிழகம் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளது.
திரு செல்வா அவர்களுக்கு,
//
சுருங்கச் சொன்னால்:
ga = 'க, ja = 'ச, da = 'ட , dha = 'த , ba = 'ப , fa = 'வ ,
ha= ஃஅ, sha = ^ச, sa = ~ச, za= *ச//

உங்கள் பரிந்துரை மிக இயல்பாகவும் எளிதாகவும் உள்ளது. முயன்ற அளவு பயன்படுத்திக் கொள்வேன்.

ha, haa, hi வரிசைக்கும் ‘அ, ‘ஆ, ‘இ என்று புழங்கலாமே? ஆய்த எழுத்து முன்கொட்டு குழப்பமாக இருக்கிறது என்று கருதுகிறேன்.

// Sundar said...
இது போன்ற சிக்கல்களை பிற மொழிக்காரர்களும் எதிர்கொண்டிருப்பர்தானே? ஏதாவது முற்காட்டுதல்கள் உண்டா?//

வடமொழி மந்திர கோச புத்தகங்களில் ஒலித்திரிபுகளை இதேபோல் குறியீடுகளை (உ.ம்: ', '', _) பயன்படுத்துகிறார்கள்.

http://en.wikisource.org/wiki/Sanskrit_Grammar/Chapter_II#62

நான் வேத துதிகளைக் கற்றுக்கொண்ட போது, அச்சுப் பிரதிகளில் இந்தக் குறியீடுகள் இல்லையென்றால் மாணாக்கர்கள் நாங்களாகவே எழுத்திக் கொள்வோம்.
வாருங்கள் குலவுசனப்பிரியன்!

//உங்கள் பரிந்துரை மிக இயல்பாகவும் எளிதாகவும் உள்ளது. முயன்ற அளவு பயன்படுத்திக் கொள்வேன்.//

உங்கள் வரவேற்புக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

//ha, haa, hi வரிசைக்கும் ‘அ, ‘ஆ, ‘இ என்று புழங்கலாமே? ஆய்த எழுத்து முன்கொட்டு குழப்பமாக இருக்கிறது என்று கருதுகிறேன்.//

ஆம் ஆய்தம் இல்லாமலே எழுதலாம்.
இவ் வலைப்பதிவில் நான் எழுதிய பிறகு 2 மாற்றங்கள் செய்தேன். ஒன்று முன் கொட்டாக 'க என்று எழுதுவதுக்கு மாறாக க' என்று பின்கொட்டு இட்டு எழுதுகிறேன். ஏனெனில் ஒற்றை மேற்கோள் குறியுடன் முரணுவதால்.

இரண்டாவது நீங்கள் கூறும் அதே மாதிரி Hanuman என்பதை அ'னுமன்
என்றும். Hitler என்பதை இ'ட்லர் என்றும் எழுதுகிறேன். மிக எளிமையாக மெல்லொலிகளைக் குறிக்க இயலுகின்றது.

நீங்கள் சுட்டிக்காட்டிய வடமொழி மந்திர கோச புத்தகங்களில் உள்ள ஒலித்திரிபுக் குறிகள் பற்றிய செய்திக்கும் மிக்க நன்றி.


//http://en.wikisource.org/wiki/Sanskrit_Grammar/Chapter_II#62//

//நான் வேத துதிகளைக் கற்றுக்கொண்ட போது, அச்சுப் பிரதிகளில் இந்தக் குறியீடுகள் இல்லையென்றால் மாணாக்கர்கள் நாங்களாகவே எழுத்திக் கொள்வோம்.//

ஆம் இதெல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகள்.

மீண்டும் உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
Sundar said…
மந்திர கோச நூல்களைப் பற்றிய தகவலுக்கு நன்றி, குலவுசனப்பிரியன்.
பேராசிரியர் அவர்களுக்கு,
விக்கிபீடியாவில் உங்கள் வரவேற்பிற்கு நன்றி, எனது மனத்தில் உறுத்திக்கொண்டிருந்த விடயம், உங்களைப்போலவே கிரந்த எழுத்துக்களான ஷ,ஸ போன்றவைகள் தமிழில் சில குறியீடுகள் கொண்டு எழுதவேண்டும் என்று நினைத்தேன், எனினும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழர்களால் அன்றுதொட்டு இன்றுவரை புழக்கத்தில் இருந்து வருகிறது. இவற்றை மாற்றுவது என்பது கடினம்தான்.

எண்களைத் தமிழில் குறிக்கப் பயன்படும் முறையும் கிரந்த எழுத்து முறை அல்லவா..

எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் இருக்கின்ற எழுத்துக்களைக் கொண்டே மாற்றி அமைத்தல்தான் நலம். அன்றேல் நீங்கள் கூறியது போல் வருங்காலத்தில் தற்போதைய எழுத்துக்களைப் பற்றிய ஆராய்வினால் எமது வரலாறு புதைந்து போகும்.

ஏற்கனவே பிராமி வடிவத்தில் இருந்து மாற்றப்பட்டு மாற்றப்பட்டு உருவாகிய தற்போதைய எழுத்துக்கள் இனிமேலாவது மாறாமல் இருக்கும் என்று நம்புவோமாக..
R.Shanmugham said…
Miga arumaiyaana karutthukkalai veliyitulleegal Selva.. Thamizhukkaana ungal muyarchi thodarattum..
Regards
Shanmugham,
Salem,
Tamilnadu..
thangaraj said…
ஐயா,
கூக்கிள் தேடலில் மூலம் இக்கட்டுரையை படிக்க நேர்ந்தது.
மிகவும் அருமை! என் மனம் நேகிழ்ந்தது. உங்களுடைய தமிழ் தொண்டு வாழ்க!!!
புள்ளி வைத்த எழுத்தில் ஒரு வார்த்தை ஆரம்பிக்கலாமா? இலக்கணப்படி அது சரியா? உதாரணத்துக்கு க்ருஷ்ணா என்று எழுதுவதா அல்லது கிருஷ்ணா என்று எழுதுவதா?
புள்ளி வைத்த எழுத்தில் தொடங்கி எழுதலாகாது. கிருட்டிணா என்றுதான் எழுதவேண்டும். கிரந்தம் கலந்து எழுதுவதானால் கிருஷ்ணா என்று எழுதலாம். கட்டாயம் புள்ளி வைத்த எழுத்தில் தொடங்கி எழுதுவது தமிழில் பிழை.
Maran said…
வணக்கமையா. தமிழின் எழுத்தொலிப்புமுறையைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவிழைகிறேன். இதைப்பற்றி எங்கே கற்றுக்கொள்ளலாம்?
வடமொழி உச்சரிப்பிற்காக கிரந்த எழுத்துகள் தமிழிழுக்கு அறிமுகஞ் செய்யப்பட்டன. முன்னர் வடமொழியால் தமிழிற்கு ஏற்பட்ட நிலை, இப்போது ஆங்கில மொழியால் ஏற்பட்டிருக்கின்றது. இதன் நன்மை தீமைகள் பற்றி விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது

http://chummaah.blogspot.ca/2009/09/blog-post_30.html

Popular posts from this blog

எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு